தற்போது நாட்டுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி தனியார் ஷெட்யூல் வங்கிகளும் ஆன்லைன் பேங்கிங் எனப்படும் இன்டர் நெட் வழி வங்கி நிதி பரிமாற்ற வசதிகளை அளித்து வருகின்றன. இந்த வசதியை கம்ப்யூட்டர் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், பி.சி. பேங்கிங் மற்றும் ஹோம் பேங்கிங் எனவும் அழைக்கின்றனர். பல வாசகர்கள் இந்த வசதியினை நாம் நம் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்துவதில் பிரச்னை ஏதும் உள்ளதா என்று கேட்டு கடிதங்களை எழுதி உள்ளனர். இதில் உள்ள நல்லதுகளையும் அல்லதுகளையும் இங்கு பார்க்கலாம்.
நன்மைகள்:
1. ஆன்லைன் பேங்கிங் முறையில் மிகப் பெரிய நன்மை ஒன்று உண்டென்றால் அது நேரத்தை மிச்சம் செய்வதுதான். நீங்கள் உங்கள் பணத்தைக் கையாளும் விதம் குறித்து எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வங்கி சென்று செக்குகளை எழுதி படிவங்களை நிரப்பும் வேலையையும் அதில் செலவழிக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. அது மட்டுமின்றி ஒரு பரிமாற்றத்திற்கான நேரத்தையும் வெகுவாகக் குறைக்கிறது. சில வேளைகளில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் கையாளுவதைக் காட்டிலும் குறைவான நேரத்தில் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
2. ஆன்லைன் பேங்கிங் என்பது 24 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் மேற்கொள்ளக் கூடிய காரியம் ஆகும். எனவே வங்கிக்கு விடுமுறை, வங்கி மூடப்படும் நேரம் என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.
3. விடுமுறைக்கு வெளி மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்று விட்டாலும் அங்கிருந்தும் உங்கள் நிதி அக்கவுண்ட்டைக் கையாளலாம். எல்லாமே ஒரு மவுஸ் கிளிக்கில் மேற்கொள்ளப்படும்.
4. பேப்பரினால் ஆன செக்குகளைப் பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிக்கு அது போல எந்தக் கட்டணமும் இல்லை. செக் புக் தீரப்போகிறதா? எப்போது மீண்டும் ஒரு புக் வாங்க வேண்டும் என்ற கவலை எதுவுமில்லாமல் ஆன்லைன் பேங்கிங் மேற்கொள்ளலாம். அது மட்டுமின்றி ஒரே ஒரு பாதுகாப்பான வெப் சைட் மூலம் உங்கள் அனைத்து பேங்க் அக்கவுண்ட்களையும் மேற்கொள்ளலாம்.
5. ஆன்லைன் பேங்கிங் வசதியைப் பெறும் இடத்தில் வேறு சில வசதிகளும் தரப்படுகின்றன. பங்கு விலை, விலை கூடுதல் குறித்த எச்சரிக்கை செய்தி, போர்ட்போலியே மேனெஜ்மென்ட் என பல வகை உதவிகளும் வசதிகளும் தரப்படுகின்றன.